கார் -லாரி மோதிய விபத்தில் 3 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள உடையனூர் பகுதியில் தேவநாதன்-இந்திராணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களில் தேவநாதன் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்தார். இவருடைய மனைவி இந்திராணி வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியினருக்கு விகாஷினி என்ற மகளும், இளமுகில் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தேவநாதனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தேவநாதன் மற்றும் அவருடைய மனைவி இந்திராணி ஒரு காரில் சென்றனர்.
இவர்களுக்கு உதவியாக மேச்சேரியை சேர்ந்த ராஜாமணி என்பவரின் மகன் சத்தியசீலன் என்பவரும் சென்றார். அந்த காரை தேவநாதன் ஓட்டியதாக தெரிகிறது. அதன்பின் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேவநாதன் சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் மேச்சேரி நோக்கி அவர்கள் அனைவரும் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு மாவட்டம் காடப்பநல்லூர் பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதனால் காரில் வந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் சடலத்தை பொக்லைன் எந்திரத்தின் மூலம் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இறந்த சத்தியசீலனுக்கு சுகன்யா என்ற மனைவியும், இஷாந்த் அத்வா என்ற மகனும், பிறந்து 6 மாதமே ஆன கைக்குழந்தையும் இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பிசென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.