நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கட்டுவிரியன் பாம்பு நுழைந்ததால் நோயாளிகள் அடித்துப் பிடித்து ஓடியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று மருத்துவமனைக்குள் நுழைந்ததால் நோயாளிகள் அடித்துப்பிடித்து ஓடியுள்ளனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மருத்துவமனைக்கு நுழைந்த அந்த பாம்பை பிடித்தனர். இதனையடுத்து அந்த பாம்பை காட்டில் கொண்டுபோய் விட்டுள்ளனர்.
இதனிடையே மருத்துவமனையில் சுற்றி இருக்கும் பகுதியில் முட்புதர்கள் மற்றும் கழிவுநீர் தேங்கி கிடப்பதால், கொசுக்கடியில் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் முட்புதர்கள் கால்வாயிலிருந்து கொடிய விஷமுள்ள பாம்புகள் அடிக்கடி மருத்துவமனைக்குள் நுழைந்து விடுகின்றது. இதனால் சிகிச்சையாளர்கள் பயத்தில் இருக்கின்றனர். எனவே முட்புதர்களை அகற்றி பாதுகாப்பான முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.