மயிலாடுதுறை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்துள்ள இளந்தோப்பு ஊராட்சி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரத்தை உயர்த்த வேண்டியும், அங்கு 24 மணி நேரமும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது . இதில் இளந்தோப்பு கடைவீதியில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு கிளை செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், வட்ட செயலாளர் மேகநாதன் மாவட்ட குழு உறுப்பினர் ரவீந்திரன் மற்றும் வட்ட குழு உறுப்பினர் ராஜேஷ் உட்பட பலர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இப்போராட்டத்தில் தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தியும், இளந்தோப்பு ஊராட்சி பகுதியில் 30 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை இடித்து புதிய வீடுகளைக் கட்டித்தர வலியுறுத்தியும் இளந்தோப்பு – பட்டவர்த்தி சுடுகாட்டு சாலையை சீரமைக்க வேண்டியும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை தாசில்தார் ராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ,வட்டார சுகாதார கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் மணல்மேடு காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் ,மேலும் மற்ற பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர் .இதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.