மசாஜ் மையம் மற்றும் மதுபானகூட வசதிகளுடன் கூடிய தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில் வருகின்ற ஜனவரி மாதம் முதல் இயக்கப்படுகிறது.
ஆடம்பர சுற்றுலாப் பிரியர்களின் வசதிக்காக கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில் கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த ரெயில் தற்போது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இந்த ரயிலை தற்போது பல்வேறு வசதிகளுடன் புதுப்பித்து உள்ளது. ரயிலில் தங்கும் அறைகள் புதுப்பித்து அலங்கரிக்கப்பட்டுள்ளன.
குளியல் அறைகள் நவீன படுத்தப்பட்டு உள்ளன. பயணிகளின் பொழுதுபோக்குக்காக ஸ்மார்ட் டிவி வசதி செய்யப்பட்டுள்ளது. நவீன எந்திரங்கள் உடன் கூடிய உடற்பயிற்சி கூடம் உள்ளது. மேலும் இயற்கை காட்சிகளை ரசித்தபடி உணவு உண்ணும் வகையில் ருசி மற்றும் நளபாகம் என்ற பெயரில் இரண்டு உணவகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தனை அம்சங்களும் கொண்ட இந்த சொகுசு ரயிலை கர்நாடகம் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு வருகின்ற ஜனவரி மாதத்திலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.