மசூதியின் நுழைவாயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இருக்கும் ஒரு மசூதியில் தலீபான்களின் செய்தி தொடர்பாளரான சபியுல்லா முஜாஹதின் தாயார் அவர்களுக்கு நேற்று முன்தினம் நினைவேந்தல் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மசூதியின் நுழைவாயிலில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதனால் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்துள்ளனர். இதனை தொடர்ந்து 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆனால் இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் கடந்த சில வாரங்களாக தலீபான்களை குறிவைத்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதால் இச்சம்பவத்தையும் அவர்கள் தான் நிகழ்த்தி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மசூதியில் குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரத்துக்குப் பின்னர் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருக்கும் முக்கிய பகுதிகளில் தலீபான்கள் அதிரடியாக நுழைந்து அவர்களை வேட்டையாடியுள்ளனர்.
மேலும் கண்ணில் தென்பட்ட அனைத்து ஐ.எஸ் பயங்கரவாதிகளையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றுள்ளது. இதிலும் பலர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் மசூதி குண்டு வெடிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தலீபான்கள் அறிவித்துள்ளனர். ஆனால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.