தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி பகுதியில் அஸ்லாம் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 9-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கல்வி மட்டும் தான் சமுதாயத்தில் ஏற்றத்தை தரக்கூடியது. பட்டம் பெற்ற மாணவர்கள் சமுதாயத்தில் அனைவரிடமும் நெருங்கி பழகி தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுதான் நீங்கள் சாதிப்பதற்கான முதல் படியாக அமையும். இன்றைய காலகட்டத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தின் வசதியோடு மாணவர்கள் அவர்களுக்கான கல்வி முறையை தேர்வு செய்து கொள்வார்கள். அதன் பிறகு அனைத்துக்கும் கூகுள் உதவியோடு தேடக்கூடாது. அனைத்தையும் google உதவியோடு தேர்வு செய்து கொண்டால் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும். தற்போது மாதா பிதா குரு தெய்வம் என்பதற்கு பதிலாக, மாதா பிதா கூகுள் தெய்வம் என்று மாறிவிட்டது. இப்படி எதற்கெடுத்தாலும் கூகுளை தேடினால் கண்டிப்பாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று மாணவர்களுக்கு அட்வைஸ் கூறினார்.