மதம் மாற கூறிய பொதுமக்களை வற்புறுத்திய கும்பலை இளைஞர்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னசேரி ஊராட்சியில் இந்து மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 15 பேர் கொண்ட கும்பல் சின்னசேரி கிராமத்திற்கு வந்து ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து கடவுளை சென்றடையும் வழி என்பது குறித்து புத்தகத்தையும், மதமாற்றம் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களையும் வழங்கியுள்ளனர். இதனால் கோபமடைந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு மதமாற்றம் செய்ய வந்த கும்பலை மடக்கி சிறை பிடித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வரவில்லை.
எனவே அவர்கள் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் துணை காவல் துறை சூப்பிரண்டு ராமமூர்த்தி மற்றும் திருநாவுக்கரசு உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறைபிடித்து வைத்திருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது இளைஞர்கள் இதற்கு முன்பு மூன்று முறை இந்த குழுவினர் எங்கள் பகுதிக்கு வந்து மதமாற்றத்தில் ஈடுபடும் படி வலியுறுத்தி வந்துள்ளனர்.
அதன்பின் நாங்கள் இல்லாத நேரத்தில் பெண்களிடம் ஆசைவார்த்தைகள் கூறி நன்றாக படிப்பதற்கும், உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் கூறி வருகின்றனர். எனவே இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் காரணத்தினால் சிறை பிடித்தவர்களை கிராம மக்கள் விடுவித்துள்ளனர். இதனை தொடர்ந்து முன்னதாக மதமாற்றத்தில் ஈடுபட்ட 15 பேருக்கும் அந்த பகுதி இளைஞர்கள் இந்து முறைப்படி விபூதி பூசி, பொட்டு வைத்துள்ளனர். மேலும் அவர்களின் வாகனத்திற்கும் இந்து முறைப்படி பூஜை செய்து பொட்டு வைத்துள்ளனர்.