ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி, கார் டிரைவரின் கார்டை பயன்படுத்தி பண மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியை அடுத்துள்ள மழையூர் கிராமத்தில் ஏடிஎம் மையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சம்பவ தினத்தன்று சாத்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்த டிரைவர் பீமன் என்பவர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் மையத்தில் அருகில் இருந்த நபர் பணம் எடுத்து தருவதாக கூறியிருக்கிறார். அவரின் பேச்சை நம்பிய பீமன் தனது ஏடிஎம் கார்டு கொடுத்துள்ளார். ஆனால் அந்த வாலிபர் டிரைவர் பீமனின் கார்டை பயன்படுத்தாமல் அவர் ஏற்கனவே வைத்திருந்த மற்றொரு ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் வரவில்லை எனக்கூறி டிரைவர் பீமனிடம் கொடுத்துள்ளார்.
இந்த கார்டை பார்க்காமல் பீமன் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் பீமனின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூபாய் 14,100 எடுத்துள்ளார். அந்த வாலிபர் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தது டிரைவரின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பீமன் இதுகுறித்து வடவணக்கம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வடவணக்கம்பாடி போலீசார் வல்லம் கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை போலீசார் விசாரித்தபோது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர் வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தை சேர்ந்த ரகுராமனின் மகன் விஜயன் என்பது தெரியவந்தது. இவரை தொடர்ந்து விசாரித்ததில் அவர் டிரைவர் பீமனின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த இரு சக்கர வாகனம் ,ரூபாய் 14,100 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.