மத்திய அரசு கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் 30-ஆம் தேதி வரை 18 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவையில் வைத்தது. இதனையடுத்து 2021 ஜூலை 1 ஆம் தேதி முதல் உள்ள தவணைக்கான அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதற்கு முன்பாக இந்த நிலுவை காலத்துக்கான DA அறிவிக்கப்பட்டு அவை அடுத்து வரும் தவணைகளில் வழங்கப்படும் என்றும் நிலுவை காலத்திற்கான DA வழங்கப்படமாட்டாது என்றும் அறிவித்தது. ஆனால் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்ததால் அவற்றை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இதனிடையில் 18 மாத நிலுவை தொகையையும் ஒரே தவணையில் வழங்கப்பட வேண்டாம் என்றும் தவணைகளாக வழங்கினால் கூட போதுமானது என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் பெரும் எதிர்பார்ப்பு விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே டிசம்பர் 25-ம் தேதி அன்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக மத்திய அமைச்சரவை மற்றும் அமைச்சரவை செயலாளருடன் இது தொடர்பான ஒரு கூட்டத்தை நடத்த வாய்ப்பு இருக்கிறது. ஜே.சி.எம்., தேசிய கவுன்சில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, நிதி அமைச்சகம் போன்றவற்றுக்கு இடையே நிலுவைத் தொகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
தற்போது 18 மாத DA நிலுவை தொகையை அரசு ஒரே தடவையில் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சில் முன்வைத்து உள்ளது. இந்நிலையில் நிலுவையில் உள்ள 18 மாத DA நிலுவை தொகை குறித்து பிரதமரே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்த முடிவுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கினால், மத்திய ஊழியர்களின் வங்கி கணக்கில் பெரியளவு தொகையானது கிடைக்கும். மத்திய அரசின் இந்த முடிவினால் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், 65 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.