இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை அமுல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தி சோனியா காந்தி, தேவகவுடா உள்ளிட்ட தேச தலைவர்களிடம் தாம் பேசியதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இதனை கூறியுள்ளார்.
மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் விஷயத்தில் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த சாதகமான தீர்ப்பை மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக தாம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஷ்ட்ரிய, ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பகுஜன் சமாஜ்வாச் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சந்திரசேகரராவ், ஜெகன் மோகன் உள்ளிட்ட தலைவர்களுடன் தாம் தொலைபேசியில் பேசியதாக கூறியுள்ளார்.
நீதிமன்ற அறிவுறுத்தலின் படி 50 சதவீத இட ஒதுக்கீட்டு நடைமுறையை சட்டமாக கமிட்டி கூட்டத்தை கூட்டுமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டு உறுதிப்படுத்துவது மாநில இட ஒதுக்கீட்டு சட்டங்களை பாதுகாப்பது தொடர்பான கோரிக்கைகளுக்கு தாம் ஆதரவு கோரியதாகவும் மு.க ஸ்டாலின் தாம் விடுத்துள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.