உயர்நீதிமன்ற மதுரை கிளை , மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு வழக்கில் மத்திய அரசும் மாநில அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மதுரையிலுள்ள வடக்கு மாசி வீதி பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,” ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக 2016ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திற்கு 977.5 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியிருக்கும் 4 மாசி வீதிகளிலும் பழமையான மரங்கள் வெட்டப்பட்டது. மேலும் ஆங்கிலேயர் காலத்தில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் வசதியும் அகற்றப்பட்டது.
தற்போது அப்பகுதியில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் 4 மாசி வீதிகளை சேர்ந்த மக்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்படுகிறது.இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான்கு மாசி வீதிகளில் நடைபெறும் பணிகளை தர ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். அப்பகுதியில் மரம் நடுவதற்காக தனி இடம் ஒதுக்க வேண்டும். மேலும் அத்திட்டத்தின் கீழ் நடைபெறும் முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ்,ஆனந்தி ஆகியோரின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கிற்கு தேவைப்படும் பட்சத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் மத்திய அரசும் மாநில அரசும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று வழக்கு விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.