கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்ற இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் மது விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவிலிருந்து சிலர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து டாஸ்மாக் கடைகளில் இருக்கும் மது பாட்டில்களை கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மார்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் சாக்குமூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்தபோது, கேரள மாநிலம் இளங்கத்துவிளையை சேர்ந்த அஜிஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர் மதுவை அதிக விலைக்கு விற்பதற்காக 23 மதுபாட்டில்களை கேரளாவுக்கு கடத்தியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதேபோன்று மெதுகும்மல் கொடித்தரறை சேர்ந்த அஜின் என்பவரும் மார்த்தாண்டம் மார்க்கெட் சாலையில் மதுபாட்டில் கடத்திய சம்பவத்தில் சிக்கி, அவரிடம் இருந்த 21 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மது கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.