கட்டிட தொழிலாளியை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி செய்த நண்பர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியதோரணபெட்டம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கிறார். இந்நிலையில் குணசேகரன் ராசிக்குட்டை பகுதியில் பெரியதோரணபெட்டத்தை சேர்ந்த தனது நண்பர்களான செல்வராஜ், சண்முகம் ஆகியோருடன் மது குடித்து கொண்டிருந்தார். இதற்கு முன்பாக செல்வராஜ் குணசேகரனிடம் மது வாங்க பணம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் கொடுத்த பணத்திற்கு குறைவான மது வாங்கி வந்ததாக கூறி குணசேகரனிடம், செல்வராஜ் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், சண்முகம் ஆகிய இருவரும் சேர்ந்து பீர் பாட்டிலை உடைத்து குணசேகரனின் கழுத்தை அறுத்தனர்.
இதனால் குணசேகரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் குணசேகரனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ் சண்முகம் ஆகிய 2 பேரையும் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.