சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பெத்தூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்பதும், இவர் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரைக் கைது செய்து அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதே போல் படகுப்பம் பகுதியில் மது விற்பனை செய்த அரசு என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.