ஊரடங்கு நேரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ரகசியமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை அடுத்து இட்டேரி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை காவல்துறையினர் நிறுத்தி அவர் வைத்திருந்த பெட்டியை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்தப் பெட்டியில் 117 வெளிமாநில மது பாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
மேலும் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் சேலம் சின்ன திருப்பதி சாந்திநகர் பகுதியில் வசிக்கும் அரிகரசுதன் என்பது தெரியவந்துள்ளது. இவர் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை வாங்கிவந்து அதிக விலைக்கு விற்பனை செய்தது காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் ஹரிஹரசுதனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.