சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடம் இருந்த 300 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள பாகாயம் காவல் அதிகாரி இன்ஸ்பெக்டர் சுபா, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் ஓட்டேரி ஏரி மதகு அருகில் அரசு மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்களை சாக்கு மூட்டைக்குள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டனர்.
இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்தவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் நாயக்கனேரி கிராமத்தில் வசித்து வரும் அன்பழகன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடம் இருந்த 300 மது பாட்டில்களையும், மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக அன்பழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.