காவல்துறையினரின் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அழிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊடரங்கின் காரணமாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அப்போது கர்நாடகப் பகுதியில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர், வெள்ளித்திருப்பூர், அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு கர்நாடகாவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட சுமார் 3443 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அனைத்தும் அந்தியூர் பெரிய ஏரிக்கரைக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. அங்கு கோபி தாசில்தார் ஷீலா மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் மது பாட்டில்கள் அழிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்துள்ளனர்.