முறைகேடான செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றுவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள கரியப்பா பகுதியில் வசிக்கும் வேலு, சரவணன் ஆகியோர் அரசு மதுக்கடையில் இருந்து 1,970 மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் அவர்கள் கச்சராபாளையம் சாலையில் இருக்கும் மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து மொத்தமாக மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக கடையின் மேற்பார்வையாளர் பெரியசாமி, விற்பனையாளர்கள் பாலு மற்றும் முனுசாமி உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இம்மாவட்டத்தில் முறைகேடாக மது பாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்கின்ற மதுக்கடையில் பணியாளர்கள் மொத்தமாக வாங்கினால் அவர்களின் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.