பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கோவிட்-19 செலவினங்களுக்கான நிதியை அதிகரிக்கும் நடவடிக்கையாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. வரி அதிகரிக்கப்பட்டால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரி 37 ரூபாய் 98 காசுகளாகவும் அதிகரிக்கும். டீசலுக்கான கலால் வரி 36 ரூபாய் 98 காசுகள் வரை உயரக்கூடும்.
நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற 2014ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரி ஒன்பது ரூபாய் 48 காசுகளாகவும், டீசலுக்கு மூன்று ரூபாய் 56 காசுகள் ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு 10 முறை கலால் வரியை உயர்த்தி உள்ளது. இந்த நிலையில்தான் கொரோனா செலவினங்களை எதிர்கொள்ள பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மீண்டும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
கலால் வரி உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல் டீசல் சில்லரை விலை உடனடியாக உயர்த்தப்படாத என்று மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் கச்சா எண்ணெய் விலை சரிவை அரசு பயன்படுத்திக் கொள்வதால் நுகர்வோருக்கு பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படுவது தடைபடும் என்பது குறிப்பிடத்தக்கது.