விவசாயி கொலை செய்த வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள நாகமநாயக்கன்பாளையத்தில் விவசாயி கோபால் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான மாட்டுத்தொழுவத்துக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் தலை மற்றும் முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதில் தொடர்புடையவரை விரைவாக பிடிப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின்படி பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் செல்போனில் கோபால் கடைசியாக பேசிய நபர், அதே பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் உட்பட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வெங்கமேடு பகுதியில் தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் வெம்பறைப்பட்டு சேட்டுபட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், கோபாலை கொலை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் சதீஷ்குமாரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளிவந்தது. அதாவது கரூரில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு சதீஷ்குமார் அடிக்கடி செல்வது வழக்கமாக இருந்தது.
அப்போது அவருக்கும், கரூருக்கு வந்த கோபாலுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் செல்போன் மூலம் கோபால் அழைத்ததால் சதீஷ்குமார் கொடுமுடி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தோட்டத்தில் வைத்து சதீஷ்குமாரிடம் கோபால் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் பீர் பாட்டிலால் கோபாலை தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சதீஷ்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வாறு விரைந்து செயல்பட்டு குற்றவாளியை பிடித்த தனிப்படை காவல்துறையினரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பாராட்டியுள்ளார்.