நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு தோனியின் வியூகங்கள் பிரதானமாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
இந்த ஐபிஎல் தொடர் சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே கொடுக்கும் வகையில் இருந்தன. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து துவண்டிருந்த சென்னை ரசிகர்கள் நேற்று நடந்த போட்டியையும் கூட கொண்டாடும் மனநிலையில் இல்லை. ஆனாலும் கேப்டன் கூல் தோனியின் கிரிக்கெட் வியூகம் 2010 போல ஐபிஎல் வரலாற்றைப் புரட்டிப் போடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் நேற்றைய போட்டியை முழுமையாக நம்பியதால் ரசிகன் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
2010ஆம் ஆண்டை போல:
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த 2010ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் முதல் 7 போட்டியில் இரண்டு வெற்றிகளை மட்டும் பெற்று 5 தோல்விகளை சந்தித்து எப்படி சென்னை அணி இருந்ததோ ? அதே போல இந்த முறையும் 7 போட்டிகளில் இரண்டு வெற்றி, ஐந்து தோல்வி என வாழ்வா ? சாவா என்ற முடிவோடு எட்டாவது போட்டியை ஹைதராபாத் சன் ரைஸ் அணியுடன் மோதியது. நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் சிறப்பாக ஆடிய சென்னை அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7 பந்து வீச்சாளர்கள்:
இந்த வெற்றிக்கு முழு காரணம் மகேந்திர சிங் தோனி தான் என்று ரசிகர்கள் புகழும் அளவிற்கு அவரின் செயல்பாடுகள் இருந்தன. தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை அணியை மீட்டெடுக்க தோனி வியூகங்களை வகுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டதை போல சி.எஸ்.கே அணியில் செயல்பாடு இருந்தது. நேற்றைய போட்டியில் சம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, பிராவோ,தீபக் சஹர், பியூஸ் சாவ்லா, தாகூர்,கரண் சர்மா என 7 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.
தோனியின் வியூகம்:
இதில், சம் கர்ரனை தோனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.வாட்சன் 2ஆம் விக்கெட்டுக்கு ஆடினார். அதே போல சென்னை அணி பந்து வீசும் போது, அடுத்தடுத்து ஓவர்களை போட வைத்து முதல் 7ஆவது ஓவரோடு தீபக் சஹரின் முழு ஓவரையும் முடிக்க வைத்தார் தோனி.அதே போல வீரர்கள் பில்டிங் செய்யும் போது அடிக்கடி மாற்றி அமைத்துக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு பந்துக்கும் பந்துவீச்சாளர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்.
நம்பிக்கை நாயகன் தல தோனி:
அதே போல 17ஆவது ஓவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் கரண் சர்மாவிடம் கொடுத்தார், அவரும் சிறப்பாக பந்து வீசி அசத்தலாக அடிவந்த வில்லியம்சன் விக்கெட்டை எடுத்தார். தாகூர் வீசிய 18.2ஆவது பந்தை அம்பயர் வைட் கொடுக்க முயன்றபோது ஆக்ரோசமாக தல தோனி நடுவரிடம் முறையிட முயன்ற போதே நடுவர் தனது முடிவை கைவிட்ட்டார். இப்படி அடுத்தடுத்து தோனியின் வியூகமே சென்னை அணியை மீண்டும் வெற்றி பெற வைத்து ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக தல தோனியை நிலை நிறுத்தியுள்ளது.