இணையதளத்தில் வரன் பார்ப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என காவல்துறையினர் வெளியிட்ட போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உற்றார் உறவினர்களின் அறிவுரைப்படி சொல்கின்ற இடத்தில் பெண் பார்ப்பதை விட்டு, சுயமாக முடிவு எடுப்பதாக எண்ணி பலர் ஆன்லைனில் பெண் தேட ஆரம்பித்துள்ளனர். கண்டிப்பாக இது ஒரு தவறான செயல் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் முக்கியமான நிகழ்வு திருமணம் தான். அதை மற்றவர்கள் பேச்சை கேட்டு தவறாக அமைத்துக் கொள்வதை காட்டிலும், தனக்கு தானே தேடி மணம் முடித்துக் கொள்வது மன திருப்தியை அளிக்கும். ஆனால் ஆன்லைனில் பெண் பார்ப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்து போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறது.
அதன் படி, இணையத்தில் வரன் பார்ப்பவர்கள் அவர்கள்(பெண்/மாப்பிள்ளை வீட்டார்) பதிவிடும் விவரங்களை நம்பி ஏமாற வேண்டாம். நீங்கள் அவர்களை நேரில் சென்று விசாரணை செய்து அவர்கள் பதிவிட்ட விவரங்கள் உண்மையானதா என அறிந்த பின்பு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். மேட்ரிமோனி என்கின்ற பெயரில் பல மோசடிக்காரர்கள் ஆன்லைனில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் பணத்தை வாங்குவது மட்டுமே குறிக்கோளாக வைத்து கொண்டு உங்களது வாழ்க்கையை நாசம் செய்து விடுவார்கள் எச்சரிக்கையாக இருங்கள் என தெரிவித்துள்ளனர்.