மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து 82 மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு நல்லகவுண்டன்பாளையத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தலா 600 சதுர அடி வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் மனை வழங்கப்பட்ட இடம் கரடு, முரடான பாறையாக இருந்ததால் அதனை அளவீடு செய்து சமன் செய்து தர வேண்டி மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படாததால் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், ஆர்.டி.ஓ. பிரேமலதா மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
அப்போது மாற்றுத்திறனாளிகள் கூறியபோது தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து சமன் செய்து தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டோம். அந்த வேளையில் எங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட அதிகாரிகள் சில மாதங்களில் இடம் அளவீடு செய்யப்பட்டு சமன் செய்து தரப்படும் என்று எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுவரை இடம் அளவீடு செய்து கொடுக்காததால் சுமார் 3 ஆண்டுகளக இந்த கோரிக்கைக்காக போராடியும் தீர்வு கிடைக்கவில்லை. இதன் காரணமாக தாங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர். எனவே எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று ஈரோடு அரசு மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர்கள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்குவதில் நிறைய சிக்கல்கள் ஏற்படுகிறது. ஆகவே நரம்பியல் மருத்துவரை நியமிக்க வேண்டும் என்றும் தங்களுக்கான கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைதொடர்ந்து அதிகாரிகள் உங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆனாலும் அதை ஏற்க மறுத்த மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையாளர் ஜானி டாம் வர்கீஸ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காணொளி காட்சி மூலம் பேசினார். அவர் உங்களுடைய கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் பேசி உடனடியாக நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே நீங்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று ஜான் டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.