வாணியம்பாடி வாரச்சந்தையில் வியாபாரிகள் சமூக இடைவெளி இன்றி மாடு விற்பனை செய்திருக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் கடந்த 2 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 62 நபர்கள் தொடர்ந்து கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று நபர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்று பரவல் வேகமாக பரவி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் வாணியம்பாடி பெங்களூர் நெடுஞ்சாலையில் இருக்கும் பேருந்து நிலையப் பகுதியில் ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை அன்று மாட்டுச்சந்தை தற்காலிகமாக நடந்து வருகின்றது. இதில் பல்வேறு கிராமத்தில் இருப்பவர்களும் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனிடையே மாடு விற்பனை செய்ய வரும் வியாபாரிகள் சமூக இடைவெளி இன்றி, முக கவசம் அணியாமல் குவிந்து நின்று மாடுகளை விற்பனை செய்துள்ளனர். இதனால் மாட்டு வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.