மாடுகளை திருடிச் சந்தையில் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை பகுதியில் அன்புமணி என்பவர் வசித்துவருகிறார். மேலும் விவசாயியான அன்புமணி மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாடுகளை மேய்ச்சலுக்காக அருகிலிருந்த வயலில் விட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாடுகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அன்புமணி வயல் பகுதியில் சென்று தேடி பார்த்துள்ளார். ஆனால் மாடுகளைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அன்புமணி அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அய்யம்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ரயில்வே கேட் அருகில் சந்தேகப்படும்படி நான்கு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.அந்த விசாரணையில் அவர்கள் சக்கராப்பள்ளியில் வசிக்கும் முகமது அசாருதீன், அப்துல் அஜீஸ், சேக் அப்துல்லா, முகமது இலியாஸ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் அன்புமணிக்கு சொந்தமான மாடுகளை திருடி தஞ்சாவூர் மாட்டு சந்தையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 4 வாலிபர்களையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.