மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் முருகேசன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் முருகேசன் தொடங்கி வைத்தார்.
அதன்பின் ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கிராமப்புற பகுதிகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அப்போது வட்டார மருத்துவ அலுவலர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலக்ஷ்மி ,மகாதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.