திருப்பத்தூரில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகழுவுதல் போன்ற கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதைப்போன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியுள்ளது. இதனால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்புமுகாமில் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.