வேலூரில் சிறுமியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சலவன்பேட்டையில் 17 வயது சிறுமி கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் கம்மவான்பேட்டை பகுதியில் வசித்து வரும் கவுதம் என்பவர் சிறுமியை காதலித்ததும், அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் கவுதம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை பிடிப்பதற்கு இன்ஸ்பெக்டர் கலையரசி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கவுதம் மற்றும் சிறுமி சலவன்பேட்டையில் உள்ள சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு சமாதானம் பேசுவதற்கு செல்ல வேலப்பாடி பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று கவுதமை கைது செய்ததோடு, சிறுமியை தொரப்பாடியில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை கடத்துவதற்கு கவுதமுக்கு உதவி செய்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் கேளூரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கம்மவான்பேட்டையை சேர்ந்த தனுஷ், மோத்தக்கல்லை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.