மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம்-ஆதிதிராவிடர் தெருவில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக உள்ளார். இவருக்கு மாலதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராமர் தனது மனைவி மற்றும் குழந்தையை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு ரங்கநாதபுரத்திலிருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் ராமர் ஈச்சம்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த மாலதி உயர் ரத்த அழுத்தம் காரணமாக திடீரென தலைசுற்றி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாலதியை ராமர் உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மாலதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.