மழையால் வாழை மரங்கள் மற்றும் நெல் மூட்டைகள் சேதமடைந்தன. விவசாயிகள் வேதனை அடைத்துள்ளதுனர்.
திருவண்ணாமலை மாவட்டம்: செய்யாறில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் கொள்முதல் செய்யப்படாமல் வெட்டவெளியில் கிடந்து மழையில் நனைந்து சேதமாகின. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில்: சாலவாக்கம் பகுதியில் பெய்த மழையில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விட்டதால், வீணான நெல் மூட்டைகளுக்கு அரசு இழப்பீடு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
சேலம் மாவட்டம்: ஓமலூர் அருகே பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக 10 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமாகின. காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இரவில் திடீரென சூறைக் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அனைத்து வாழைகளும் சாய்ந்து சேதமாகின உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம்: குளித்தலை அருகே இடி மின்னலுடன் கூடிய சூறைக் காற்று வீசியதில் 150க்கும் மேற்பட்ட ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமாகின. மருதூர், கூடலூர், கணேசபுரம் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் காற்றின் காரணமாக வாழை மரங்கள் முறிந்தன. இதனால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் உரிய ஆய்வு செய்து அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம், உத்திரமேரூர் அருகே காற்றுடன் கூடிய மழையின் போது உயர் அழுத்த மின்சார கம்பிகள் கரும்புத் தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.