கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றால் மருத்துவர்கள் இடைவிடாது, ஓய்வில்லாமல் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்த தொற்று பாதிப்பால் பணிகளின் போது, ஏராளமான மருத்துவர்கள் உயிரிழந்தனர். இருந்தபோதிலும் அரசு மருத்துவர்கள் பயப்படாமல் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை அளித்து வந்தனர். மருத்துவர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அதில் பேசிய அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், கொரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவர்கள் தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல், மற்ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாக தங்கள் பணியை செய்து வருவதால் அரசிற்கு விருதுகள் கிடைக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
மேலும் புதிய ஆட்சி வந்து 8 மாதங்களாகியும் இவர்களுடைய கோரிக்கையோ, ஊதிய உயர்வு பற்றியோ எந்தவித தகவலும் வழங்கப்படவில்லை. எனவே எதிர்க்கட்சியாக இருந்த போது, கொடுத்த வாக்குறுதிகளை இப்போதைய அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்படும் அதே பயிற்சி ஊழியத்தை ராஜா முத்தையா கல்லூரி பயிற்சி மருத்துவர்களுக்கும் அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராடி வருகின்றனர்.
அதனால் போராடுபவர்களை அச்சுறுத்தும் நோக்கத்தை கைவிட்டு விட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இளங்கலை, முதுகலை மருத்துவ கலந்தாய்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். அதனால் மாணவர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். எனவே கலந்தாய்வை வெளிப்படைத் தன்மையோடு நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க முன்னோட்டத்தை வழங்கி மாணவர்கள் மத்தியில் உள்ள பயத்தைப் போக்க வேண்டும் என்றும், டாக்டர் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.