தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளைச் சுகாதாரமாக பராமரிக்க உத்தரவிடக்கோரி விழுப்புரம் மாவட்டம், வானூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், “சென்னை சைதாப்பேட்டையிலுள்ள எம்.சி. ராஜா மாணவர் விடுதியில் அடிப்படை வசதியும் இல்லை. சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதுமில்லை. பட்டியலின மக்கள் நலனுக்காக மத்திய அரசு, 2018-19ஆம் ஆண்டில் 47.99 கோடி ரூபாயை ஒதுக்கியது. அதில் சிறிதளவு கூட மாநில அரசு செலவளிக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விடுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி புகைப்படங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி சுப்ரமண்யம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி அலுவலர்கள் ஆய்வும் மேற்கொள்ளவில்லை, அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இது தொடர்பாக ஜனவரி 20ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலர், சைதாப்பேட்டையிலுள்ள விடுதி வார்டன் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்