நாமக்கல் மாவட்டத்தில் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்த மெக்கானிக் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கருக்கம்பாளையத்தில் வசித்து வரும் செல்வராஜ்(50) என்பவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி சந்திரா(40). இவர்களுக்கு சசிகுமார்(21) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் 6 வருடங்களுக்கு முன் சந்திரா அவரது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து செல்வராஜும் மனைவி விட்டு சென்ற சோகத்தில் பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் விரக்தியடைந்த செல்வராஜ் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அவரை உடனடியாக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்பு அவரது நிலையை அறிந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அழிக்கப்பட்டும் செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.