கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சுகாதாரப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வைட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகளை 10 நாட்களுக்கு தினமும் ஒன்று வழங்க உத்தரவிட்டுள்ளது. அதேபோல, கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கவும் சுகாதார துறை உத்தரவு அளித்துள்ளது. கொரோனாவுக்கு எதிர்த்து
போராடும் வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு மருந்தினை கொடுக்க தமிழக சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.
அதனடிப்படையில், ஆயுர்வேதம் மற்றும் மருந்து வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜிங்க் 150 மி.கி மாத்திரைகள் 10 தினங்களுக்கும், விட்டமின் சி மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் 10 தினங்களுக்கும், அதேபோல நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் உள்ளிட்ட ஆயுர்வேத மருந்துகளை தினமும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துகளை கொரோனாவுக்கு எதிராக போராடும் களப்பணியாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை அனைத்து சுகாதாரத்துறை அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.