வீட்டிலேயே சிகிச்சை பெறுபவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் அடங்கிய சிறப்பு மருத்துவ தொகுப்பு பெட்டி வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 58 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,605ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 2 பேரும், நெல்லையில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 40ஆக அதிகரித்துள்ளது. கொரோனா இறப்பு விகிதம் 0.68%ஆக உள்ளது. இது இந்தியாவிலேயே குறைவு, எனவே மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.
வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு ஜின்க் சல்பேட் மாத்திரைகள் அடங்கிய மருத்துவ தொகுப்பு வழங்கப்படுகிறது. மேலும் கபசுர குடிநீர் – 6, முக கவசம் – 15, மல்டி விட்டமின் மாத்திரைகள் 50 வழங்கப்படுகிறது என அவர் தெரித்துள்ளார். அறிகுறியே இல்லாத பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என தகவல் அளித்துள்ளார்.