சென்னையில் 300 டன் மருத்துவ கழிவுகளை பத்திரமாக அழித்துள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு பணிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். அம்மாதிரியான பகுதிகளில் மக்கள் பயன்படுத்தக்கூடிய முகக்கவசம், கையுறை உள்ளிட்ட கொரோனா பரவலை ஏற்படுத்தும் மருத்துவ கழிவுகளை icmr மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
அதாவது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வீடுகளுக்கும் மஞ்சள் நிறப் பை கொடுக்கப்படுகிறது. அந்த பையில் அவர்கள் பயன்படுத்திய கையுறை, முககவசம் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகளை போட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் பாதுகாப்பாக வழங்கி விடுவார்கள். அதன்பின், அந்த மஞ்சள் நிற பைகள் மணலியில் இருக்கக்கூடிய ஆலை ஒன்றில் 1000 முதல் 1500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரித்து சாம்பலாக்கபடுகிறது.
கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு 5 முதல் 6 டன் அளவில் இது போன்ற மருத்துவ கழிவுகள் வருவதாகவும், இதுவரை சென்னை மாநகராட்சி சார்பில் 300 டன் மருத்துவ கழிவுகள் இதுபோன்ற முறையில் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் சென்னையில் பரிசோதனை அதிகரித்து வருவதால் கொரோனா பாதிப்பு விரைவாகக் குறைந்து வருவதாகவும் விரைவில் சென்னையை நலமாக மீட்டெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.