Categories
உலக செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ரெமடிசிவர்- அமெரிக்க ஆய்வாளர்கள் நம்பிக்கை …!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் காலத்தை குறைக்க ரெமடிசிவர் மருந்து உதவும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

சீனாவில் ஆரம்பித்து உலக நாடுகள் முழுவதிலும் பரவி வரும் கொரோன தொற்றுக்கு அமெரிக்கா அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தொற்றின் தாக்கம் அதிகரித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் தொற்றை தடுக்கும் மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து கொரோனா வைரசுக்கு எதிராக சோதனை மருந்து ஒன்று செயல்படுகிறது எனவும் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விரைவில் இதனை கிடைக்கச் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 1063 பேருக்கு புதிதாக கண்டறிந்த ரெமடிசிவர் என்ற மருந்து கொடுக்கப்பட்டது.

இதனால் நோயாளிகள் குணமடையும் காலம் 31% குறைந்து 15 நாளிலிருந்து 11 நாட்களாக குறைந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த மருந்தின் மூலம் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேசிய சுகாதார அமைப்பைச் சார்ந்த மருத்துவர் அந்தோணி “கொரோனா தொற்றை ரெமடிசிவர் கட்டுப்படுத்துகின்றது. அதனால் இந்த மருந்து கொரோனா சிகிச்சையில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மருந்தை பல சோதனைகளில் மதிப்பீடு செய்துள்ளோம். அனைத்திலும் இது தொற்றை கட்டுப்படுத்தப்படுவது தெளிவாகவே தெரிகின்றது” என கூறினார்.

ரெமடிசிவர் மருந்தை எடுத்துக் கொண்டவர்களின் இறப்பு 8 சதவீதமாக இருப்பதாகவும் அந்த மருந்தை எடுத்துக் கொள்ளாதவர்கள் இறப்பு 11.6 சதவீதமாக இருக்கின்றது. இது குறித்து ஆராய்ச்சியாளர் கூறுகையில் “மருந்து உட்கொண்டவர்களுக்கும் மருந்தை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும் இறப்பு விகிதத்தில் பெரிய அளவு வேறுபாடு இல்லை. எனவே இதனை வைத்து ரெமடிசிவர் உயிரிழப்பை கட்டுப்படுத்தவும் உதவும் என உறுதியாக கூறமுடியாது. ஆனால் இந்த மருந்து எடுத்துக் கொள்பவர்கள் குணமடையும் காலம் குறைந்துள்ளது” என கூறினார்.

அமெரிக்காவை தவிர சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளும் தொற்றிற்கு ரெமடிசிவர் மருந்தை பயன்படுத்தலாமா  என்ற ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றன. 2 லட்சத்திற்கும் அதிகமான உயிர்ப்பலியை எடுத்த தொற்றிற்கு சர்வதேச அளவில் ஒப்புக்கொண்ட தடுப்பு மருந்து அல்லது சிகிச்சை முறை இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் ரெமடிசிவர் மருந்து கொரோனா தொற்று  பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய உதவும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |