தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.103 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் முதல் இரண்டு நாட்கள் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் மது விற்பனையாகியிருந்த நிலையில் அதனை தொடர்ந்து டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.100 கோடிக்கு கீழ் குறைந்தது. முதல் நாள் ரூ.163.5 கோடி, இரண்டாம் நாள் ரூ.133 கோடி, 3வது நாள் ரூ. 100 கோடிக்கும், நான்காம் நாள் ரூ. 91 கோடி, ஐந்தாம் நாள் ரூ. 98.5 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. நேற்று முன்தினம் (20-05-2020) தமிழகம் முழுவதும் 98.5 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று (21-05-2020 ) ஒரே நாளில் ரூ.103 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ. 25 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.24, கோடி சேலம் மண்டலத்தில் ரூ. 23 கோடி, கோவையில் ரூ. 22 கோடி, மற்றும் சென்னை மண்டலத்தில் ரூ. 7 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. தமிழகம் முழுவதும் சென்னை, திருவள்ளூர் நீங்கலாக அனைத்து மாவட்டங்களில் இருக்க கூடிய மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் சாதாரண ரகம் மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் விற்று தீர்ந்துள்ளன.
உயர் ரக மது பானங்கள் மட்டுமே தற்போது விற்பனை செய்யப்பட்டுகிறது என டாஸ்மாக் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மேலும் சாதாரண ரகம் மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் கிடங்கில் இல்லை என்பதால் ஊரடங்கு நிறைவடைந்த பின்னர் தயாரிக்க சில நாட்கள் தேவை என்பதால் தற்போது கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர விலை மதுபானங்கள் இல்லாததால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 1,700 கடைகள் மூடிக்கிடக்கின்றன. மூடிக்கிடக்கும் கடைகளில் ரூ. 350 கோடிக்கு மதுபான வகைகள் இருப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மூடிக்கிடக்கும் கடைகளில் உள்ள மது பானங்களை மற்ற கடைகளுக்கு மாற்றி விற்பனை செய்யுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.