மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாளாப்பள்ளி பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி இருகின்றார். இந்நிலையில் முனியப்பன் தனது மனைவியிடம் கே.பி.ஆர். அணையில் மீன்பிடிக்க செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் முனியப்பன் மீண்டும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி கோவிந்தம்மாள் பதற்றமடைந்துள்ளரர். இதுகுறித்து கோவிந்தம்மாள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மோட்டார் படகு மூலம் முனியப்பனை தேடிப் பார்த்தார்கள்.
ஆனால் நீண்ட நேரமாக தேடியும் முனியப்பன் கிடைக்காததால் காவல்துறையினர் அவரை தேடும் பணியை மறுநாள் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் தேடு பணி தீவிரமாக நடைபெற்ற போது அவருடைய படகு மட்டும் கிடைத்ததுள்ளது. இதனையடுத்து பரிசல் மூழ்கிய இடத்தில் தேடிய தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்தில் முனியப்பனின் சடலம் கிடப்பதை கண்டனர். அதன் பிறகு காவல்துறையினர் முனியப்பனின் சடலத்தை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கிருஷ்ணகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.