ஏரிக்கு மீன்பிடிக்க சென்ற ஹோட்டல் உரிமையாளர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் முரளி -ரஞ்சிதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முரளி அப்பகுதியில் ஹோட்டல் ஒன்று நடத்தி வந்தார். அவரது ஹோட்டல் அருகே நந்ததேவன் என்ற ஏரி அமைந்திருந்தது . முரளி ஹோட்டலில் மதிய உணவாக அருகில் உள்ள ஏரியில் மீன்களை பிடித்து சமைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அதன்படி நேற்று முன் தினம் மீன்களை பிடிக்க ஏரிக்கு சென்றார்.பிறகு வலையை ஏரியில் வீசி விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இரவு 10 மணி அளவில் வலையில் சிக்கிய மீன்களை எடுப்பதற்காக வீட்டிலிருந்து ஏரிக்கு சென்றுள்ளார் . ஆனால் நெடுநேரமாகியும் முரளி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுபற்றி அவருடைய குடும்பத்தினர் முரளியின் நண்பர்களிடம் தகவலை தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த முரளியின் நண்பர்கள் ஏரிக்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது கரையில் முரளியின் செருப்பு மற்றும் கைலிகள் இருந்துள்ளது .உடனடியாக அப்பகுதி இளைஞர்கள் ஏரியில் இரவு முழுவதும் முரளியை தேடிபார்த்துள்ளனர் . முரளி கிடைக்காததால் தீயணைப்பு துறை வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ரப்பர் படகின் மூலம் முரளியை தேடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு நேற்று மதியம் முரளியின் உடல் மீட்கப்பட்டது. மீன் பிடிக்க ஏரிக்கு சென்ற பொழுது ஏரியின் சகதியில் முரளி சிக்கி உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.