மீன் பிடித்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி மீனவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இனயம் சின்னதுறை கடற்கரை கிராமத்தில் மீனவரான அருள் பெஸ்லின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது 4 நண்பர்களுடன் இணைந்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து பைபர் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளார். இவர்கள் துறைமுகத்தை ஒட்டி மீன் பிடித்து கொண்டிருந்த போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக அருள் பெஸ்லின் மீது மின்னல் தாக்கியதால் உடல் கருகிய நிலையில் அவர் கீழே விழுந்துவிட்டார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் உடனடியாக அருள் பெஸ்லினை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.