சரக்கு கப்பல் விசைப்படகு மீது மோதிய விபத்தில் 7 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது தலைமையில் ரஞ்சித், மணி, லோகநாதன், அஜித்குமார், ராஜாக்கண்ணு, ஹரி ஆகிய 7 மீனவர்களும் அதிகாலை 2 மணி அளவில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் எண்ணூர் துறைமுகம் பக்கத்தில் நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும் போது விசைப்படகின் எஞ்சின் பெல்ட் திடீரென அறுந்து விழுந்ததால் படகு அங்கேயே பழுதாகி நின்றுள்ளது. எனவே பழுதை சரி செய்யும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சரக்கு கப்பல் இவர்களின் விசைப்படகு மீது பலமாக மோதி சேதப்படுத்தியது. இதனை அடுத்து சேதமடைந்த விசைப்படகு கடலில் மூழ்க தொடங்கியதால் இவர்கள் தங்களிடமிருந்த வயர்லெஸ் மூலம் படகு விபத்துக்குள்ளாகி விட்டது, எனவும் எங்களை காப்பாற்றுங்கள் எனவும் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பிற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் படகு கடலில் மூழ்கியதால் 7 மீனவர்களும் தண்ணீரில் குதித்து நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சக மீனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடுக்கடலில் 2 மணி நேரமாக தத்தளித்துக் கொண்டிருந்த ஏழு மீனவர்களையும் பத்திரமாக காப்பாற்றி காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பிறகு மிகவும் சோர்வுடன் காணப்பட்ட மீனவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காசிமேடு மீன்பிடி துறைமுக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.