தரை கடைகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டதால் வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள துறையூரில் நகராட்சிக்குட்பட்ட சாமிநாதன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் சுமார் 45 தரைக்கடைகள் உள்ளன. அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடை வைத்துள்ள வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியிலிருந்து மேற்கூரை அமைத்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதற்காக நகராட்சி நிர்வாகம் கடை ஒன்றுக்கு ரூ.20 என நிர்ணயம் செய்து வசூலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் கடந்த இரண்டு முறை உரிய காலத்தில் மின் கட்டணத்தை செலுத்தாததால் தரைக்கடை வியாபாரிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமமடைந்தனர்.
இந்நிலையில் மின்கட்டணத்தை நகராட்சி நிர்வாகம் செலுத்தாத காரணத்தால் மின்சாரத்தை மின் வாரிய பணியாளர்கள் துண்டித்தனர். இதனால் பெரும்பாலான வியாபாரிகள் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் வியாபாரம் செய்தனர். இதனைத் தொடர்ந்து துறையூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக மின் கட்டணத்தை செலுத்தியதயடுத்து மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தரைக்கடை வியாபாரிகள் மின்விளக்கு ஒளியில் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர்.