இரண்டு நாட்களுக்கு இறைச்சி விற்பனைக்கு தடை என்பதால் தக்கலை சந்தையில் மீன் வாங்குவதற்கு கூட்டம் அலை மோதியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகள் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களுக்கும் சேர்த்து வெள்ளிக்கிழமையே பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றுள்ளனர். இதனையடுத்து விற்பனைக்கு கொண்டு வந்த அனைத்து மீன்களும் விற்று போனதால் குமரிமாவட்டத்தில் பொதுமக்கள் சிலர் மீன் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் தக்கலை பத்மநாபபுரம் நகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் பேட்டை சந்தை அருகில் மீன் கடை மற்றும் இறைச்சிக் கடைகள் இருந்ததால், அங்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மீன்களை வாங்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மீன் வியாபாரி கூறியபோது சனி மற்றும் ஞாயிறு மீன் சந்தை அடைக்கப்போவதாக யாருக்கும் தெரியவில்லை. அதன்பிறகு தெரிந்தவுடன் போட்டிபோட்டு வாங்குவதாகவும் கூறியுள்ளார். இதனால் தினசரி மீன் வாங்க வருபவருக்கு மீன் கொடுக்க முடியாமல் போய்விட்டது என்று வியாபாரி கூறியுள்ளார். இதேபோன்று நாகர்கோவில் மார்த்தாண்டம் போன்ற பல்வேறு மாவட்ட பகுதிகளில் மீன் சந்தை மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அலை மோதியுள்ளது. இதில் மீன் கடைகளில் மட்டும் அதிகமாக கூட்டம் குவிந்து காணப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.