சசிகலா தனது உடல்நிலை சரியானதும் விரைவில் மக்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.
சசிகலா நேற்று கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையானார். அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சீராக உணவு அருந்துவதாகவும், நடப்பதாகவும் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. சசிகலா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார் என்றும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
வருகிற 30-ஆம் தேதி சசிகலாவுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு அதில் பாதிப்பு இல்லை என்றால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தான் தமிழகத்திற்கு வர திட்டமிட்டுள்ளாராம். பிப்ரவரி 3ஆம் தேதி அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. அவர் சென்னை திரும்பும்போது பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வரும் வழியில் அவருக்கு கோலாகலமான வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் 66 வயதை குறிக்கும் வகையில் 66 இடங்களிலும் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் கையெழுத்து வாங்கி கொடுத்து இருக்கிறார்கள் என அவரது வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார். விரைவில் தமிழக மக்களை சந்தித்து பேசுவேன் என்று சசிகலா கூறியதாக அவர் தெரிவித்தார்.