இந்தியாவில் வங்கியில் பண மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டில் தலைமறைவான வைர வியாபாரி, ஆன்டிகுவாவில் குடியுரிமை பெற பொய்யான சத்திய பிரமாணம் தாக்கல் செய்தது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மெகுல் சோக்சி என்ற வைர வியாபாரி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரத்து 500 கோடி கடனாக பெற்று மோசடி செய்துள்ளார். அவரை சிபிஐ வழக்கு பதிவு செய்து தேடியதால், ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்தார். ஆனால் கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று அவர் காணாமல் போனார்.
அங்கிருந்து படகு வழியாக டொமினிகன் தப்பிச் சென்றபோது, அங்குள்ள காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டார். தற்போது அவர் டொமினிகன் சிறையில் தான் உள்ளார். அங்கிருந்து அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அவர் ஆன்டிகுவாவின் குடியுரிமை பெற்றிருப்பதால், அவரை நாடு கடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் ஆன்டிகுவா அமைச்சர் மெல்போர்டு நிக்கோலஸ் கூறுகையில், மெகுல் சோக்சி, ஆன்டிகுவாவின் குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பத்தில், என் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்று பொய்யான சத்திய பிரமாணம் தாக்கல் செய்ததால், அவரின் குடியுரிமை ரத்து செய்வதற்கு, உத்தரவிடப்பட்டது. எனினும் அந்த உத்தரவிற்கு எதிராக, அவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.