விமானப்படை அதிகாரி ஒருவர் சக அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் உள்ள சரவாக் மாகாணத்தில் விமானப்படை தளம் ஒன்று அமைந்துள்ளது. அந்த விமான தளத்தில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த 12 ஆம் தேதி வழக்கம்போல் விமானப்படை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோதனை சாவடிக்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரரிடம் இருந்த துப்பாக்கியை அதிகாரி ஒருவர் கோபமாக பறித்துள்ளார். அப்போது அங்கிருந்த மற்றொரு அதிகாரி அந்த கோபக்கார அதிகாரியை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் கோபக்கார அதிகாரி எதையும் கேட்காமல் சமாதனம் செய்தவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்நிலையில் அந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இதனைதொடர்ந்து அந்த கோபக்கார அதிகாரி பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த மேலும் இரண்டு அதிகாரிகளை சுட்டுக் கொன்றுள்ளார். அதன்பின் அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விமானப்படை தளத்தின் உயர்அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது வரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் தொடர் விசாரணைக்கு பிறகு பல உண்மை செய்திகள் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.