தமிழகத்தில் நேரிட்ட சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலை பகுதியில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த சென்னையை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேசன் ஆபத்தான நிலையில் அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதைப்போல் கரூர் அன்பு நகரைச் சேர்ந்த இளைஞர்கள் இரவு நேரத்தில் மது போதையில் ஓட்டிச் சென்ற காரும் விபத்துக்குள்ளானது. சாலையோரத்தில் இருந்த கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தை இடித்துத் தள்ளி அருகில் இருந்த சுவர் மீது கார் மோதியது. விபத்தில் காரில் பயணித்த ஆகாஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்த் என்ற மற்றொரு இளைஞர் பலத்த காயங்களுடன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதனிடையே சேலம் அருகே உள்ள கன்னங்குறிச்சி புது ஏரி பகுதியில் மணல் ஏற்றிக்கொண்டு லாரி கட்டுப்பாட்டை இழந்த 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார். மூன்று கிரேட் வாகனங்களின் உதவியுடன் சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்பட்டது.