தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் தலைவரின் கணவரும் ஈடுபடுவதால் வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட ஊராட்சி சுருளிப்பாட்டு. இங்கு ஊராட்சி தலைவராக நாகமணி வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவரது கணவரும் ஊராட்சிமன்ற நிர்வாகத்தில் தலையிடுவதால் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைதொடந்து நேற்று மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் மாவட்ட உரக்க வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ஜெயகாந்தன், கோதண்டபாணி மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்கு நேரில் வந்துள்ளார்.
அப்போது சுருளிப்பட்டி ஊராட்சி அருகே சென்றுகொண்டிருக்கும்போது அந்த வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரின் காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் ஊராட்சியில் நடக்கும் முறைகேடு குறித்தும், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து மனுவை பெற்று கொண்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.