அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் ஆட்சி அமைப்பார் என கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பின்தங்கி இருந்தாலும், அவரே திரும்பவும் ஆட்சி அமைப்பார் என தகவல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் வெளியாகியுள்ளது. வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், மக்கள் தங்களின் ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போது உள்ள ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து கணிப்புகளில் மிக மோசமான நிலையில் பின்னடைந்து உள்ளார். இருந்தாலும் அனைத்தையும் மீறி அவர் வெற்றி கொள்வார் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்ற 2016ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் இருந்ததைவிட தற்போது டொனால்ட் பிரம்பின் பிரச்சாரத்தில் அதிக உற்சாகம் இருப்பதாக குடியரசு கட்சியினர் டுவிட்டர் பக்கத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டிருந்தனர் . இருந்தாலும் மறுபுறம் ஜனநாயக கட்சி வேட்பாளர், ஜோ பிடென் பிரச்சாரத்தில் உற்சாகம் இல்லை என கூறியுள்ளனர். 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நடந்த கருத்துக் கணிப்பில், டிரம்ப் தனக்கு எதிராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு பின்னடைவில் இருந்தார். இருந்தாலும் அவரே அந்த ஆண்டு வெற்றி பெற்றார் என்பதை அந்த அணி சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் பல வாரங்களாக ஜோபிடெனுக்குப் பின்னால் இருக்கின்றார். இருந்தாலும் பொதுமக்களின் வாக்குகளைவிட மாகாண அளவில் தேர்வு செய்யப்படும் அந்த 270 உறுப்பினர்களே ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது.